தேவாரம் -சுந்தரர்

Print Page  திருச்சிற்றம்பலம்

சுந்தரர்
{வரிசை எண். பெரியபுராண புத்தகத்தில் தடுத்தாட்கொண்ட புராணம் பாடல் எண் / சுந்தரமூர்த்தி சுவாமி தேவார புத்தக பக்க எண்}

    1.    74 / 221
            கொத்தார்மலர்க் குழலாளொரு கூறாய்அடி யவர்பால்
            மெய்த்தாயினும் இனியானைஅவ் வியன் நாவலர் பெருமான்
            "பித்தாபிறை சூடி எனப் பெரிதாந்திருப் பதிகம்
            இத்தாரணி முதலாம்உல கெல்லாம்உ(ய்)ய எடுத்தார்.
      
                பித்தாபிறை சூடிபெரு மானே அருளாளா
                எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
                வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள்
                அத்தாஉனக் காளாயினி அல்லேன்எனல் ஆமே.

    2.    78 / 207
            நாவலர்கோன் ஆரூரன் தனைவெண்ணைய் நல்லூரில்
            மேவும்அருட் டுறையமர்ந்த வேதியராட் கொண்டதற்பின்
            பூவலருந் தடம்பொய்கைத் திருநாவ லூர்புகுந்து
            தேவர்பிரான் தனைப்பணிந்து திருப்பதிகம் பாடினார்.

                கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய
                மேவலர் முப்புரம் தீயெழு வித்தவன் ஓரம்பினால்
                ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட
                நாவல னார்க்கிடம் ஆவது நந்திரு நாவலூரே.

    3.    79 / 224
            சிவனுறையுந் திருத்துறையூர் சென்றணைந்து "தீவினையால்
            அவனெறியிற் செல்லாமே தடுத்தாண்டாய் அடியேற்குத்
            தவநெறிதந் தருள்" என்று தம்பிரான் முன்னின்று
            பவநெறிக்கு விலக்காகுந் திருப்பதிகம் பாடினார்.

                மலையார் அருவித் திரள்மா மணிஉந்திக்
                குலையாரக் கொணர்ந்தெற்றி யோர்பெண்ணை வடபால்
                கலையார் அல்குற்கன் னியர் ஆடும் துறையூர்த்
                தலைவா உனைவேண்டிக் கொள்வேன் தவநெறியே.

    4.    88 / 204
            செம்மாந்திங் கியானறியா தென்செய்தேன் எனத்தெளிந்து
            தம்மானை அறியாத சாதியார் உளரேஎன்(று)
            அம்மானை திருவதிகை வீரட்டா னத்தமர்ந்த
            கைம்மாவின் உரியானைக் கழல்பணிந்து பாடினார்.

                தம்மானை அறியாத சாதியார் உளரெ
                    சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
                கைம்மாவின் உரியானைக் கரிகாட்டில் ஆடல்
                    உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்
                தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடும்என்னும்
                    ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்
                எம்மானை எறிகெடில வடவீரட் டானத்
                    துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.

    5.    91 / 201
            பரம்பொருளைப் பணிந்துதாள் பரவிப்போய்ப் பணிந்தவர்க்கு
            வரந்தருவான் தினைநகரை வணங்கினர் வண்டமிழ்பாடி
            நரம்புடையாழ் ஒலிமுழவின் நாதஒலி வேதஒலி
            அரம்பையர்தம் கீதஒலி அறாத்தில்லை மருங்கணைந்தார்.

                நீறு தாங்கிய திருநுத லானை
                    நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தை
                கூறு தாங்கிய கொள்கையி னானைக்
                    குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல்
                ஆறு தாங்கிய அழகனை அமரர்க்
                    கரிய சோதியை வரிவரால் உகளும்
                சேறு தாங்கிய திருத்தினை நகருட்
                    சிவக்கொழுந்தினைச் சென்றடை மனனே
    6.    112 / 11
            இருக்கோலம் இடும்பெருமான் எதிர்நின்றும் எழுந்தருள
            வெருக்கோளுற் றதுநீங்க ஆரூர்மேற் செலவிரும்பிப்
            பெருக்கோதஞ் சூழ்புறவப் பெரும்பதியை வணங்கிப் போய்த்
            திருக்கோலக் காவணங்கிச் செந்தமிழ்மா லைகள்பாடி,

                சாதலும் பிறத்தலும் தவிர்த்தெனை வகுத்துத்
                    தன்அருள் தந்தஎம் தலைவனை மலையின்
                மாதினை மதித்தங்கொர் பால்கொண்ட மணியை
                    வருபுனல் சடையிடை வைத்தஎம் மானை
                ஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை
                    எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்
                காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த
                    கழுமல வளநகர்க் கண்டுகொண்டேனே.

    7.    123 / 143
            வந்தெதிர் கொண்டு வணங்கு வார்முன் வன்றொண்டர் அஞசலி கூப்பிவந்து
            சிந்தை களிப்புற வீதியூடு செல்வார் திருத்தொண்டர் தம்மை நோக்கி
            "எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்னும்
            சந்த இசைப்பதிகங்கள் பாடித் தம்பெருமான் திருவாயில் சார்ந்தார்.
          
                கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம்
                உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன்
                வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லம்
                அரையனி ருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோகேளீர்.

    8.    199 / 133
            தொல்லைமால் வரைபயந்த தூயாள் திருப்பாகன்
            அல்லல்தீர்ந் துலகுய்ய மறையளித்த திருவாக்கால்
            "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்"என்று
            "எல்லையில்வண் புகழாரை எடுத்திசைப்பா மொழி"என்றார்.

                த்¢ல்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
                    திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்
                இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
                    இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்
                வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
                    விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்
                அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
                    ஆரூரன் ஆரூரில் அம்மானுக்காளே.


{வரிசை எண். பெரியபுராண புத்தகத்தில் ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் பாடல் எண் / சுந்தரமூர்த்தி சுவாமி தேவார புத்தக பக்க எண்}

    9.    20 / 160
            ஆளிடவேண் டிக்கொள்வார் அருகுதிருப் பதியான
            கோளிலியில் தம்பெருமான் கோயிலினை வந்தெய்தி
            "வாளன கண்மடவாள் வருந்தாமே" எனும்பதிகம்
            மூளவருங் காதலுடன் முன்தொழுது பாடுதலும்.

                நீள நினைந்தடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்
                வாளன கண்மடவாள் அவள் வாடி வருந்தாமே
                கோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்
                ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.

    10    41 / 154
            வென்றி வெள்ளே றுயர்த்தருளும் விமலர் திருக்கோ புரம்இறைஞ்சி
            ஒன்றும் உள்ளத் தொடும்அன்பால் உச்சி குவித்த கரத்தோடும்
            சென்று புக்குப் பணிந்துதிருப் பதிகம் "பூணாண்" என்றெடுத்துக்
            கொன்றை முடியார் அருளுரிமை சிறப்பித் தார்கோட் புலியாரை.
      

                பூணான் ஆவதொர் அரவங்கண் டஞ்சேன்
                    புறங்காட் டாடல்கண் டிகழேன்
                பேணீ ராகிலும் பெருமையை உணர்வேன்
                    பிறவே னாகிலும் மறவேன்
                காணீ ராகிலுங் காண்பனென் மனத்தால்
                    கருதீ ராகிலுங் கருதி
                நானே லும்மடி பாடுதல் ஒழியேன்
                     நாட்டியத் தான்குடி நம்பீ

    11.    43 / 157
            அங்கு நின்றும் எழுந்தருளி அளவில் அன்பின் உள்மகிழ்ச்
            செங்கண் நுதலார் மேவுதிரு வலிவ லத்தைச் சேர்ந்திறைஞ்சி
            மங்கை பாகர் தமைப்பதிகம் "வலிவ லத்துக் கண்டேன்"என்(று)
            எங்கும் நிகழ்ந்த தமிழ்மாலை எடுத்துத் தொடுத்த இசைபுனைவார்.

                ஊனங் கத்துபயிர் பாய்உல கெல்லாம்
                    ஓங்கா ரத்துரு ஆகிநின் றானை
                வானங்கத் தவர்க் கும்அளப் பரிய
                    வள்ள லைஅடி யார்கள்தம் உள்ளத்
                தேனங் கத்தமு தாகிஉள் ளூறும்
                    தேச னைத்திளைத் தற்கினி யானை
                மானங் கைத்தலத் தேந்தவல் லானை
                    வலிவ லந்தனில் வந்துகண் டேனே.      
    12.     51 / 121
            தொண்டர் உணரமகிழிந்தெழுந்து துணைக்கைக் கமலமுகைதலைமேல்
            கொண்டு கோயிலுட்புக்குக் குறிப்பில் அடங்காப் பேரன்பு
            மண்டு காதலுறவணங்கி வாய்த்த மதுர மொழிமாலை
            பண்டங் கிசையில் "தம்மையே புகழ்ந்" தென் றெடுத்துப் பாடினார்.
          
                தம்மை யேபுகழ்ந் திச்சை பேசினும்
                    சார்வி னுந் தொண்டர் தருகிலாப்
                பொய்ம்மை யாளரைப் பாடாதேயேந்தை
                    புகலூர் பாடுமின் புலவீர்காள்
                இம்மை யேதரும் சோறுங் கூறையும்
                    ஏத்த லாம்இடர் கெடலுமாம்
                அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
                    கியாதும் ஐயுற வில்லையே
    13     53 / 118
            செய்ய சடையார் திருப்பனையூர்ப் புறத்துத் திருக்கூத் தொடுங்காட்சி
            எய்த அருள எதிர்சென்றங் கெழுந்த விருப்பால் விழுந்திறைஞ்சி
            ஐயர் தம்மை "அரங்காட வல்லார் அவரே அழகியர்" என்(று)
            உய்ய உலகு பெரும்பதிகம் பாடி அருள்பெற் றுடன்போந்தார்.

                மாடமாளிகை கோபுரத்தொடு மண்டபம்வள ரும்வளர்பொழில்
                பாடல் வண்டறையும் பழனத் திருப்பனையூர்த்
                தோடுபெய்தொரு காதினிற்குழை தூங்கத்தொண்டர்கள் துள்ளிப்பாடநின்(று)  
                ஆடு மாறுவல்லார் அவரே அழகியரே.

    14.    56 / 114
            பலநாள் அமர்வார் பரமர்திரு அருளால் அங்கு நின்றும்போய்ச்
            சிலைமா மேரு வீரனார் திருநன் னிலத்துச் சென்றெய்தி
            வலமா வந்து கோயிலினுள் வணங்கி மகிழ்ந்து பாடினார்
            தலமார்கின்ற "தண்ணியல்வெம் மையினான்" என்னுந் தமிழ்மாலை.

                தண்ணியல் வெம்மையினான் தலையிற்கடை தோறும்பலி
                பண்ணியல் மென்மொழியார் இடக் கொண்டுழல் பண்டரங்கன்
                புண்ணிய  நான்மறையோர் முறையால்அடி போற்றிசைப்ப
                நண்ணிய நன்னிலத்துப் பெருங்கோயில் நயந்தவனே.

    15.    59 / 99
            படங்கொள் அரவில் துயில்வோனும் பதுமத் தோனும் பரவரிய
            விடங்கன் விண்ணோர் பெருமானை விரவும் புளக முடன்பரவி
            "அடங்கல் வீழி கொண்டிருந்தீர் அடியே னுக்கும் அருளும்" எனத்
            தடங்கொள் செஞ்சொற் றமிழ்மாலை சாத்தி அங்குச் சாருநாள்.

                நம்பினார்க்கருள் செய்யு மந்தணர் நான்ம றைக்கிட மாயவேள்வியுள்
                செம்பொ னேர்மட வாரணி பெற்ற திருமிழலை
                உம்ப ரார்தொழு தேத்த மாமலை யாளோடும் முடனே உறைவிடம்
                அம்பொன் வீழிகொண் டீர்அடி யேற்கும் அருளுதிரே.

    16.    60 / 111
            வாசி யறிந்து காசளிக்க வல்ல மிழலை வாணர்பால்
            தேசு மிக்க திருவருள்முன் பெற்றுத் திருவாஞ் சியத்தடிகள்
                பாச மறுத்தாட் கொள்ளுந்தாள் பணிந்து "பொருவ னார்" என்னும்
            மாசில் பதிகம் பாடிஅமர்ந் தரிசிற் கரைப்புத் தூரணைந்தார்.

                பொருவ னார்புரி நூலர் புணர்முலை உமையவளோடு
                மருவ னார்மரு வார்பால் வருவதும் இல்லைநம் அடிகள்
                திருவ னார்பணிந் தேத்தும் திகழ்திரு வாஞ்சியத் துறையும்
                ஒருவ னார் அடியாரை ஊழ்வினை நலியஒட் டாரே.

    17.    61 / 102
            செழுநீர் நறையூர் நிலவுதிருச் சித்தீச் சரமும் பணிந்தேத்தி
            விழுநீர் மையினில் பெருந்தொண்டர் விருப்பி னோடும் எதிர்கொள்ள
            மழுவோ டிளமான் கரதலத்தில் உடையார் திருப்புத் தூர்வணங்கித்,
            தொழுநீர் மையினில் துதித்தேத்தித் தொண்டர் சூழ உறையுநாள்.

                நீரும் மலரும் நிலவும் சடைமேல்
                ஊரும் அரவம் உடையான் இடமாம்
                வாரும் அருவி மணிபொன் கொழித்துச்
                சேரும் நறையூர்ச் சித்தீச் சரமே.

    18.    63 / 80
            விளங்குந் திருவா வடுதுறையில் மேயார்கோயில் புடைவலங்கொண்(டு)
            உளங்கொண் டுருகும் அன்பினுடன் உள்புக் கிறைஞ்சி ஏத்துவார்
            வளங்கொள் பதிகம் "மறையவன்"என் றெடுத்து வளவன் செங்கணான்
            தளங்கொள் பிறப்புஞ் சிறப்பித்துத் தமிழ்ச்சொன் மாலை சாத்தினார்.

                மறைய வனொரு மாணிவந் தடைய வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்
                கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன்
                இறைவன் எம்பெரு மான் என்றெப் போதும் ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்
                அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.

    19.    66 / 73
            பெருகும் பதிகம் "பிறையணிவாள் நுதலாள்" பாடிப் பெயர்ந்துநிறை
            திருவின் மலியுஞ் சிவபுரத்துத் தேவர் பெருமான் கழல்வணங்கி
            உருகுஞ் சிந்தை யுடன்போந்தே உமையோர் பாகர் தாம்மகிழ்ந்து
            மருவும் பதிகள் பிறபணிந்து கலைய  நல்லூர் மருங்கணைந்தார்.
          
                பிறையணி வாள்நுதளாள் உமையாளவள் பேழ்கணிக்க
                நிறைபணி நெஞ்சனுங்க நீலமால்விடம் உண்டதென்னே
                குறைபணி குல்லைமுல்லை அளைந்துகுளிர் மாதவிமேல்
                சிறைபணி வண்டுகள்சேர் திருநாகேச் சரத்தானே.

    20.    67 / 108
            செம்மை மறையோர் திருக்கலைய நல்லூர் இறைவர் சேவடிக்கீழ்
            மும்மை வணக்கம் பெறஇறைஞ்சி முன்பு பரவித் தொழுதெழுவார்
            கொம்மை மருவு "குரும்பைமுலை உமையாள்" என்னுந் திருப்பதிகம்
            மெய்ம்மைப் புராணம் பலவுமிகச் சிறப்பித்(து) இசையின் விளம்பினார்.
  
                குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங் கண்டு
                    குறிப்பினொடுஞ் சென்றவள்தன் குணத்தினைநன் கறிந்து
                விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த
                    விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியவூர் வினவில்
                அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
                    அணிமயில்கள் நடமாடும் அணிபொழில்சூழ் அயலின்
                கரும்பருகே கருங்குவளை கண்வளருங் கழனிக்
                    கமலங்கள் முகமலரும் கலயநல்லூர் காணே.

    21.    70 / 72
                "அழல்நீர் ஒழுகி அனைய" எனும் அஞ்சொற் பதிகம் எடுத்தருளிக்
                கழல்நீ டியஅன் பினிற்போற்றுங் காதல் கூரப் பரவியபின்
                கெழுநீர் மையினில் அருள்பெற்றுப் போந்து பரவை யார்கேள்வர்
                முழுநீ றணிவார் அமர்ந்தபதி பலவும் பணிந்து முன்னுவார்

                    அழல்நீர் ஒழுகி அனைய சடையும்
                    உழையீர் உரியும் உடையான் இடமாம்
                    கழைநீர் முத்துங் கனகக் குவையும்
                    சுழல்நீர்ப் பொன்னிச் சோற்றுத் துறையே.  

    22.    71 / 54
            தேவர் பெருமான் கண்டியூர் பணிந்து திருவை யாறதனை
            மேவி வணங்கிப் பூந்துருத்தி விமலர் பாதந் தொழுதிறைஞ்சிச்
            சேவில் வருவார் திருவாலம் பொழிலிற் சேர்ந்து தாழ்ந்திரவு
            பாவு சயனத் தமர்ந்தருளிப் பள்ளி கொள்ளக் கனவின்கண்.

                பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
                இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன்நான்  
                கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலை
                அரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.

    23.    73 / 58
            அணைந்து திருக்கோ புரம்இறைஞ்சி அன்பர் சூழ உடன்புகுந்து
            பணங்கொள் அரவம் அணிந்தார்முன் பணிந்து வீழ்ந்து பரங்கருணைக்
            குணங்கொள் அருளின் திறம்போற்றிக் கொண்டபுளகத் துடனுருகிப்
            புணர்ந்த இசையால் திருப்பதிகம் "பொன்னார் மேனி" என்றெடுத்து.

                பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
                மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
                மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
                அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
      

        திருச்சிற்றம்பலம்

No comments:

Post a Comment